சென்னை: “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்வதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்” என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், தவெக தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தை நாளை (திங்கட்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க உள்ளது. இந்த சூழலில் இது தொடர்பாக வன்னியரசு, சமூக வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நடிகர் விஜய்யை காண வந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 40 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. விசிக தலைவர் கரூரை நோக்கி பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். ஆனால், நேற்று கரூரிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறாமல் அவசரம் அவசரமாக எஸ்கேப்பாகி சென்னை வந்துவிட்டார். இதுவரை தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை. இந்த சூழலில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக.
இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய். இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி, நீதிமன்றத்தை நாடுவது ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில் தானா?” என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.