சென்னை: கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “நேற்று கரூரில் நடந்த விபத்தை நினைத்து இதுவரை எனக்கு மனம் பதறிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் அன்றாடம் நாம் சந்தித்து மகிழும் தெய்வங்கள். இது போன்ற கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் நாம் அழைத்துச் செல்லும் இடத்துக்கு வந்துவிடுவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த நெரிசலில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவருவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. கூட்ட நெரிசல் என்பதே அனைவரையும் மீறி நடக்கக் கூடிய ஒன்று. இந்த நெரிசலுக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அந்த குடும்பங்களின் இழப்புக்கு யாராலும் ஈடு செய்ய முடியாது. பதில் சொல்லவும் முடியாது.
இப்படிப்பட்ட விபத்துகளின் போது பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும். மக்கள் ஒன்றாக இணைந்து, கட்டுப்பாட்டுடன் எப்படி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய நேரம் இது. எங்கு சென்றாலும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். அந்த நெரிசலின் போது எந்த முயற்சி செய்தாலும் அது நடக்காத காரியம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார் லதா ரஜினிகாந்த்.