ராமநாதபுரம்: தமிழக முதல்வர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்து ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத் திட்டங்கள் வழங்க விருந்த நிலையில் கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தியும், நலத் திட்டங்கள் வழங்கியும் வருகிறார். இந்நிலையில் முதல்வர், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செப்.29ம் தேதி (திங்கள்கிழமை) வருகை தந்து, செப்.30ம் தேதி ( செவ்வாய் கிழமை) மாவட்ட வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தவும், நலத்திட்டங்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து முதல்வரின் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ராமநாதபுரம் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, ”கட்சி தலைமை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வருகை தந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி, கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.