சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.29ம் தேதி) முதல் அக்.4ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் நாளை (செப்.29ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
செப்.30 முதல் அக்.1 வரை ஓரிரு இடங்களிலும், அக்.2 முதல் அக்.4ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.29ம்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 4 செ.மீ மழை, தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், சின்கோனா, வால்பாறை தாலுகா அலுவலகம், நீலகிரி மாவட்டம், விண்ட் வொர்த் எஸ்டேட், அவலாஞ்சியில் 3 செ.மீ மழை, தருமபுரி மாவட்டம் அரூர், நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, மேல் பவானி, கோவை மாவட்டம் சோலையார், விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது”
என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.