சென்னை: திருவண்ணாமலை மாநகரில், மறைந்த முதல்வர் அண்ணாவின் சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தி, சிலையை திருடிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தின் சார்பில் அக்டோபர் மூன்றாம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாநகரில், மறைந்த முதல்வர் அண்ணாவின் சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தி, மேற்படி சிலையை திருடிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், விடியா திமுக அரசை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தின் சார்பில், அக்டோபர் 3ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில், திருவண்ணாமலையில் அகற்றப்பட்ட அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக மகளிர் அணிச் செயலாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். இராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தூசி மு. மோகன், திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆன்றார்கள், சான்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.