கரூர்: “கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத விஜய் எப்படி தலைவராக இருக்க முடியும்? அவர் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும், மக்களுடன் நின்றிருக்க வேண்டும். வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் போன உயிர்கள் மீண்டும் வருமா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கரூரில் நேற்று விஜய் பிரச்சாரம் செய்த இடத்தை பார்வையிட்டு பேசிய நயினார் நாகேந்திரன், “பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?
அப்பாவி மக்கள் இவ்வளவு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர் களத்துக்கு வரவேண்டும் என்பதில்லை. அவர் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும், மக்களுடன் நின்றிருக்க வேண்டும். வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் போன உயிர்கள் மீண்டும் வருமா? குறைந்தபட்சம் நேரில் வந்து ஆறுதலாவது சொல்ல வேண்டும்.
எல்லா தலைவர்களும் வந்து விசாரித்து ஆறுதல் சொல்லும்போது, அவர் களத்துக்கே இன்னும் வரவில்லை. உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரிக்க வேண்டும். காவல் துறை இந்தக் கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை, இது அவர்களின் கவனக் குறைவு. காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதில் ஏதோ சதி நடந்துள்ளது, 3 முறை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.