சென்னை: ‘உயர் நீதிமன்றம் உடனடியாக கரூர் சம்பவத்தில் தலையிட்டு வழக்குப் பதிந்து, சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, தவெக தலைவர் விஜய் மீதும், பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோ பிரச்சாரங்களைத் தடை செய்ய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற, நடிகர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சி, ஒரு பேரதிர்ச்சியையும் பேராபத்தையும் உருவாக்கியுள்ளது. கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 39 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்ற செய்திகளும், நம் அனைவரின் உள்ளத்தையும் உருக்குகின்றன.
பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில், 12.00 மணிக்கே வந்திருக்க வேண்டிய விஜய் அவர்கள் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், மக்கள் அதிகமாகக் கூடுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதோடு, காத்திருந்த மக்களுக்கு தண்ணீர் உணவு மற்றும் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யாததுதான், நாட்டையே உலுக்கி இருக்கிற இந்தத் துயரச் சம்பவத்துக்கு காரணம். ஒரு மனிதனின் உயிர் வாக்குகளை விட மேலானது என்பதை, அரசியல் களத்தில் சிலர் மறந்துவிட்டனர் என்பது வேதனையளிக்கிறது.
அதுமட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே பொதுமக்கள் பலர் மயங்கி விழுந்திருக்கின்றனர். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் திருச்சி விமான நிலையம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே, பலரும் அங்கே இறந்துவிட்ட செய்திகளும், மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்ட செய்திகளும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளையும் அமைச்சர்களையும், உடனடியாகக் கரூருக்கு அனுப்பிய செய்திகளும், அதன் காட்சிகளும், தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக வந்த வண்ணமே இருந்தன.
சென்னைக்குப் புறப்படுவதற்காக, திருச்சி விமான நிலையத்திற்கு வந்த, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களிடம், 30 பேர் இறந்ததுக் குறித்தும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்தும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதையும், அதைக் கண்டும் காணாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் விமான நிலையத்திற்குள் சென்றதையும், தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது.
வாழும் தலைமுறை குறித்தும், அவர்களின் உயிர் பாதுகாப்புக் குறித்தும், அக்கரை கொள்ளாத ஒருவர், எதிர்காலத் தலைமுறைக்கும், எந்த நன்மையும் செய்துவிட முடியாது என்பதே உண்மை. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சிந்தியக் கண்ணீரும், மரண ஓலங்களும், அழுகுரல்களும், நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிகமான மன வலியையும், வேதனையையும் தந்திருக்கிறது.
இத்தகைய ரோடு ஷோ பரப்புரைகள், அரசியல் ஆடம்பரத்துக்காக நடத்தப்படலாம். ஆனால், அதற்காகப் பொதுமக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மக்களின் உயிரைப் பறிக்கும் சினிமாத்தனமான அரசியலை, எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது . தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதை வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு, அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், உயர்நீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட்டு வழக்குப் பதிந்து, சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதும், பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும், தகுந்தப் பாதுகாப்புகளோடு, உயிராபத்து ஏற்படாத வண்ணம் நடைபெறுவதற்கான, நல்லதொரு ஆலோசனைகளைத் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும், வழங்கிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இப்படியான ரோட்ஷோ பிரச்சாரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண நிதி மற்றும் உதவி வழங்கப்பட வேண்டும் என்றும், காயமடைந்தோருக்குச் சிறப்பு மருத்துவக் குழு மூலம் விரைவான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, எமது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தச் சகோதர சகோதரிகள் விரைவில் நலம் பெறவும், உளமார வேண்டுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.