கரூர்: சிதறிக்கிடக்கும் காலணிகள், தவெக தொண்டர்கள் அணிந்திருந்த கசங்கிய கட்சி துண்டுகள், கிழிந்து கிடக்கும் பேனர்கள் என கரூர் வேலுசாமிபுரத்தின் கூட்டம் நடந்த இடம் சோகத்தின் அத்தனை வடுக்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தங்கள் பகுதிக்கு வருகிறார் என்பதால் அப்பகுதி மக்கள் நேற்று அடைந்த உற்சாகத்தை பல்வேறு தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் வெளிப்படுத்தியதை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால், அந்த உற்சாகம் இன்று அப்பகுதியின் மாபெரும் சோகமாக மாறியுள்ளது.
கூட்டம் நடந்த இடத்துக்கு அதிகாலை முதல் ஏராளமான மக்கள் வந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். சிதறிக் கிடக்கும் காலணிகள், தவெக தொண்டர்கள் அணிந்திருந்த கசங்கிய கட்சி துண்டுகள், கிழிந்து கிடக்கும் பேனர்கள், உடைந்து கிடக்கும் மரக்கிளை என்று அப்பகுதி பெரும் சோகத்தின் அடையாளமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
நேற்று இரவு என்ன நடந்தது என்பதன் வாழும் சாட்சிகளாக உள்ள பலரும், தாங்கள் நேரில் கண்ட பெரும் துயரத்தை பலருடனும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்க முடிந்தது. சொல்வதற்கு நிறைய இருந்தும், வார்த்தைகள் இன்றி பலர் மவுனமாக சம்பவ இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
தங்கள் பகுதியில் இப்படி ஒரு பெரும் துயர் நேர்ந்திருக்கக் கூடாது என பலரும் வேதனையில் உழல்வதை நம்மாலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான உறவினர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன்பாக உறவினர்களை வரவழைத்து உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தி அதன்பிறகே உறவினர்களிம் ஒப்படைக்கப்படுகிறது. 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நான்கு பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.