ஜார்சுகுடா: பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடிசாவின் ஜார்சுகடா நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இத்துடன் 97,500 செல்போன் டவர்களும் திறக்கப்பட்டன.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டாகும். இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவையை, ஒடிசாவின் ஜார்சுகுடா நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
மேலும், 97,500 செல்போன் கோபுரங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதில் 92,600 கோபுரங்கள் 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கக் கூடியவையாகும். இந்த செல்போன் கோபுரங்கள் ரூ.37,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த செல்போன் கோபுரங்கள் ஒடிசா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், குஜராத் மற்றும் பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7,545 4ஜி கோபுரங்கள் உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள செல்போன் கோபுரங்கள் 4ஜி-யாக தரம் உயர்த்தப்படுகின்றன. சேலம், கடலூர், வேலூர், மதுரை, ஈரோடு மாவட்டங்களிலும் அதிக அளவிலான கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படும்.
இந்த செல்போன் கோபுரங்கள் அனைத்தும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். தொலைத் தொடர்புத் துறையில் சீனா, டென்மார்க், ஸ்வீடன், தென்கொரியா போன்ற சில நாடுகள் மட்டுமே உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 4ஜி சேவை மூலம் ஒடிசாவில் 2,472 கிராமங்கள் உட்பட, முன்பு தொலைத் தொடர்பு சேவை கிடைக்காத 26,700 கிராமங்கள் இணைக்கப்படும். இவற்றில் பல மிகவும் தொலைதூரக் கிராமங்கள் மற்றும் தீவிரவாத பாதிப்பு உள்ள பகுதிகளாகும்.
இந்த விரிவாக்கம் மூலம் பின்தங்கிய மக்களும் டிஜிட்டல் சேவை மற்றும் தகவல் தொடர்பை பெற முடியும். இதன் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களுக்கு தொலைத் தொடர்பு சேவை அளிக்கப்படும்.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், சூரிய மின்சக்தியில் இயங்கும் செல்போன் கோபுரங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் 4ஜி கோபுரங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும். இது நாட்டில் மிகப் பெரிய பசுமை தொலைத் தொடர்பு தொகுப்புகளை உருவாக்கும்.
சுதேசி 4ஜி சேவையுடன், டிஜிட்டல் பாரத் நிதி திட்டத்தையும் பிரதமர் மோடி தொங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மூலம் சுமார் 30,000 கிராமங்களில் 100 சதவீதம் 4ஜி சேவை செயல்படுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் புதிய அவதாரம்: பிஎஸ்என்எல் சுதேசி 4ஜி சேவை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியில் ஒடிசா முக்கியப் பங்காற்றும். ஒடிசாவில் இயற்கை வளங்கள் அதிகம். ஆனாலும், ஒடிசா பல ஆண்டுகாலமாக சிரமத்துக்குளாகி வந்தது. ஆனால், வரும் பத்தாண்டுகளில் ஒடிசா செழிப்படையும். இது ஒடிசாவுக்கு மிக முக்கியமான காலமாகும்.
ஒடிசாவில் 2 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. செமி கண்டக்டர் பூங்காவும் ஒடிசாவில் அமைக்கப்படும். ஒடிசா இரட்டை இன்ஜின் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கிறது. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் ஒடிசாவில் தொடங்கியுள்ளன.
தற்போது பிஎஸ்என்எல் புதிய அவதாரம் எடுத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சுதேசி 4ஜி சேவை குறித்து மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையும் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி இணைத்துள்ளார். இந்த சுதேசி 4ஜி தொழில்நுட்பம் மீது வெளிநாடுகள் பலவும் ஆர்வம் காட்டுவதால், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.