பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள ராமதீர்த்த மலை குகையில் ரஷ்யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக அங்கு சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கர்நாடக போலீஸார் அவரை மீட்டு கடந்த ஜூலையில் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் நினா குடினாவின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்ஸ்டெயின் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “தனது மனைவி, மகள்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, என் மனைவிக்கு உரிய ஆவணங்களை வழங்க வேண்டும். ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்”என கோரினார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம்.ஷியாம் பிரசாத் நேற்று தீர்ப்பை வெளியிட்டார். அதில், “மத்திய வெளியுறவுத் துறை ரஷ்ய அரசுடன் பேசி நினா குடினா சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வருகிற அக்டோபர் 9-ம் தேதிக்குள் அவரும், 2 மகள்களும் ரஷ்யாவுக்கு செல்வதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும்.
மனுதாரர் ட்ரோர் ஷலோமா கோல்ட்ஸ்டெயின் தாக்கல் செய்த ஆவணங்களில் மகள்கள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே 2 மகள்களும் தங்களது தாயுடன் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டும்” என்று உத்தரவிட்டார்.