குவாங்ஜு: தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 18 வயதான இந்தியாவின் ஷீத்தல் தேவி 146-143 என்ற கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனையான துருக்கியின் ஓஸ்னூர் க்யூர் கிர்டியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் கலப்பு அணிகள் பிரிவில் தோமன் குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜோடை கிரின்ஹாம், நேதன் மாக்குயின் ஜோடியை 152-149 என்ற கணக்கில் தோற்கடித்தது. மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் சரிதாவுடன் இணைந்து ஷீத்தல் தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த ஜோடி இறுதிப் போட்டியில் துருக்கி ஜோடியிடம் 148-152 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஷைலேஷ் குமார்: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் டி 42 பிரிவில் இந்தியாவின் ஷைலேஷ் குமார் 1.91 மீட்டர் உயரம் தாண்டிதங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாத்தி வெண்கலப்பதக்கமும், பாராலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் எஸ்ரா ஃப்ரெச் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இருவரும் தலா 1.85 மீட்டர் உயரம் தாண்டினார்கள். ஆனால் எஸ்ரா ஃப்ரெச் அதிகமுறை இந்த உயரத்தை தாண்டியதால் அவர், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்