சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், திருச்சி, சேலம், திண்டுக்கல் ஆட்சியர்கள் கரூருக்கு சென்று மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடும்படி அறிவித்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (27.9.2025) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும். நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.