திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நாயகனான உற்சவர் மலையப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. உலர் பழங்கள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களும் தினமும் பிற்பகலில் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சன சேவை (அபிஷேகம்) நடத்துவது ஐதீகம். இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு இரண்டு முறை சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்படும். பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளும், 7-ம் நாளும் உற்சவ மூர்த்திகளுக்கு இவ்வாறு சிறப்பு திருமஞ்சன சேவை நடத்துவது ஐதீகம்.
நேற்று 4-ம் நாள் என்பதால் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிடவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் உலர் பழங்களாலும் மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, வெட்டிவேர், கொம்பு மஞ்சள், உலர் திராட்சை, ஏலக்காய், துளசி மற்றும் ரோஜாக்களால் அலங்காரம் செய்தனர். இது காண்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது.இந்த நிகழ்ச்சியில் சின்ன ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.