சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
அவசர உதவி எண்கள் அறிவிப்பு: இந்நிலையில், கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் நேரடி எண்: 04324 256306 வாட்ஸ் அப் எண்: 7010806322 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
கரூர் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்ல, “நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: மேலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை ஆணையம் அமைப்பு: கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கரூரில் காலையில் கூட்டத்துக்காக தவெக தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் கூடியது தொடங்கி மாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது வரையிலான நிகழ்வுகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
அலைமோதிய கூட்டம்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேற்றிரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 3 மணிக்கு பிறகு தான் விஜய் அங்கிருந்து கிளம்பினார்.
இதற்கிடையே கரூர் வேலுசாமிபுரத்தில் நண்பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சார பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால், இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.
தண்ணீர் பாட்டில்களை வழங்கிய விஜய்: ஏற்கனவே குறுகிய இடமான அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சை கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சார பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்கி மூச்சு திணறினர்.
இதனால், விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். இதனால் பேச்சை நிறுத்திய விஜய், தனது பிரச்சார பேருந்தில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.
ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பலர் தொடர்ந்து மயக்கமடைந்தனர். அவர்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் கிடைக்காத நிலையில், விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.
உயிரிழப்பு அதிகரிக்கலாம்: அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரின் உடல்களும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 40-க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளோரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவக் கல்லூரி முன்பு குழுமியுள்ளனர். அவர்கள் கதறி அழுது துடித்ததால் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.
முதல்வர் உத்தரவு: இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு பாதிக்கப்பட்டோரை மீட்கவும், அவர்களுக்கு உரிய மருத்துவ கிசி்ச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
அதையடுத்து 50-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான பணிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்தபடி செந்தில் பாலாஜி தீவிரப்படுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் போதுமான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் பிரச்சாரம் நடந்த இடத்தில் ஆம்புலன்ஸை அனுமதிக்க மறுத்தவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் பிரச்சாரம் நடந்த பகுதி செருப்புகள், தண்ணீர் பாட்டில்கள், கட்சித் துண்டுகள் சிதறிக் கிடந்து போர்க்களம் போல காட்சியளித்தது. கரூரில் நடைபெற்ற சம்பவம் காரணமாக கரூர் மாநகரமே கண்ணீர்மயமாக காட்சியளிக்கிறது.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மீது நடவடிக்கை? கரூர் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது: கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தை மருத்துவம் தொடர்பான மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து மருத்துவர்களும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரை காப்பாற்ற வேண்டும்; இதற்கு மேல் ஒரு உயிர் போகக்கூடாது என்பதே எங்களது முதல் நோக்கம்.
மருத்துவக்குழு ஏற்பாடு செய்யாதது உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்: இந்த சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் துரதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்பட்ட துயரச் செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கரூரில் நடந்த அரசியல் பிரச்சாரத்தின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன், எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வேண்டுகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளை வழங்கவும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் இரங்கல்: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
கண்ணீர் சிந்திய அன்பில் மகேஸ்: கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். பின்னர் வெளியில் வந்து நின்று கொண்டிருந்த அமைச்சர்கள் கவலையோடு காட்சியளித்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ், கதறி அழுதார். அப்போது முன்னாள் அமைசர் செந்தில் பாலாஜியும் கண்கள் கலங்கி நின்றார்.

விஜய் இரங்கல்: கரூர் கூட்ட நெரிசல் குறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விஜய் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு கிளம்பும் போது செய்தியாளர்கள் கேள்விகளை புறக்கணித்துச் சென்றார். அது பேசு பொருளான நிலையில், தற்போது அவர் இந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.
10 ஆயிரம் பேருக்கு தான் அனுமதியா? கரூரில் இன்றைய கூட்டத்துக்கு தவெக சார்பில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கேற்ப காவல்துறை ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்ததாகவும், ஆனால் அதைவிட பல மடங்கு அதிகமாக கூட்டம் கூடியதாலேயே இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக போலீஸ் அனுமதி வேண்டிய அனுப்பிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விஜய்யிடம் விசாரணை?! இதற்கிடையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு தமிழக காவல்துறையினர்.விரைந்துள்ளதாக தகவல். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதால், தேவைப்படும் பட்சத்தில் விஜய் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.