சென்னை: தவெக கொடியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தவெக தலைவர் விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தங்களடைய வணிகச்சின்னம் போல் உள்ளதாகவும், அந்தக் கொடியைப் பயன்படுத்த தவெக-வுக்கு தடை விதி்க்கக் கோரியும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியைப் பயன்படுத்த தவெக-வுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பச்சையப்பன், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் கணபதி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து இந்த வழக்கில், தவெக தலைவர் விஜய், 6 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.