நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் வழங்க வலியுத்தி வரும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது.
நியூயார்க்கில் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் இடையே ஜி-4 எனப்படும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஐ.நா-வின் பாதுகாப்பு அவையை சீர்திருத்துவது உட்பட ஐநா அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா, பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியேரா ஆகியோர் கலந்து கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர மற்றம் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என 4 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, அரசாங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த கூட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், “எனது சகாக்களான தகேஷி, இவாயா, ஜோஹன் வடேபுல், மவுரோ வியேரா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டதில் மகிழ்ச்சி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐக்கிய நாடுகள் சபையை சீர்திருத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜி-4 மீண்டும் வலியுறுத்தியது. அரசாங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை செயல்முறையின் தற்போதைய நிலை குறித்தும் இது மதிப்பிட்டது” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதிலும், ஐ.நா. சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்ரேஸ், “இதற்கு முன் ஆவணங்களை வெளியிடக் கூட முடியாத நிலையில் குழு இருந்தது. இதனால், ஒரு வருடத்தில் இருந்து அடுத்த வருடத்துக்கு இது தொடர்பான ஆவணங்கள் நகராது. தற்போது குழு தீவிரமாகச் செயல்படுகிறது. முன்னேற்றம் இருப்பதை நான் காண்கிறேன்” என தெரிவித்துள்ளார். உலகலாவிய தெற்கின் 42 நாடுகள், ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பான சி-10 ஆகியவை ஐ.நா. சீர்திருத்தத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.