சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை, வைணவ சம்பிரதாயம், பண்டைய பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் மையமாகத் திகழ்கிறது. வைணவத்தைப் பரப்புவதையும், பக்தி மார்க்கப் பணிகளை செய்வதையும் தலையாயப் பணியாகக் கொண்டு இம்மையம் செயல் பட்டு வருகிறது.
வைணவ சம்பிரதாயம் செழித்து வளர, பகவத் ராமானுஜர் சீரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். தனது ஆயிரக்கணக் கான சீடர்களில் இருந்து 74 பேரைத் தேர்வு செய்து, ஸ்ரீமன் நாராயணனின் சேவைக்காக நியமித்தார். இவர்கள் வைணவ சம்பிரதாயத்தின் கடமைகளை உலகம் முழுவதும் பரப்பு வதையே தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர்.
74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவரின் வம்சாவளியில் அவதரித்த உ.வே. ஸ்ரீ அத்தங்கி திருமலாச்சாரியாரின் கைங்கர்யம் அளப்பரியது. திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை 200 ஆண்டு காலபழமையானது. லட்சுமி நரசிம்ம பெருமாளை பிரதான தெய்வமாகக் கொண்டு, இங்கு தினசரி ஆராதனை நடந்து வருகிறது.
அத்தங்கி ஸ்ரீ திருமலாச்சாரி யாரின் திருக்குமாரன் உ.வே. ஸ்ரீ அத்தங்கி ஸ்ரீநிவாசாச்சாரியார், தனது தந்தையின் வழியில் ஆச்சாரியராக இருந்து பல மாணவர்களுக்கு வைணவ சம்பிரதாயங்களை உபதேசித்து வருகிறார். மேலும், பல இடங்களில் உபன்யாச நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருமாளிகை யில் நவராத்திரி விழா கோலாகல மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொம்மைகள், முறை யாகப் பராமரிக்கப்பட்டு, நவராத்திரி விழாவில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

தந்தையாரின் விருப்ப விழா: இதுதொடர்பாக உ.வே. ஸ்ரீ அத்தங்கி ஸ்ரீநிவாசாச்சாரியார் கூறும்போது, “எனது தந்தையாரின் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்ற நோக்கில், வைணவ சம்பிரதாயத்தை செழித்து வளரச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில் அவரது விருப்ப விழாவாக இருந்த நவராத்திரி வைபவத்தை நான் ஒவ்வொரு வருட மும் நிகழ்த்தி வருகிறேன்.
நவராத்திரி கொலுவில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொம்மையும் மிகவும் பழமை வாய்ந்தது. மகாவிஷ்ணு, கண்ணன், ராமபிரான், வாமன அவதார பொம்மைகள் 80 ஆண்டு காலம், கீதோபதேசம், ருக்மிணி சமேத ஸ்ரீ கிருஷ்ணன் பொம்மைகள் 100 ஆண்டு காலம், இதர பொம்மைகள் 200 ஆண்டு காலம் பழமையானவை.
இந்த பொம்மைகளை பராமரிப்பது சற்று கடினமான செயல் தான். அவற்றை முறையாகப் பராமரித்து, அதன் பாரம்பரி யத்தை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த கொலு மூலம் இளம் தலைமுறையினருக்கு, நமது பண்பாடு, கலாச்சாரம், வைணவ சம்பிரதாயங்கள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லி வருகிறேன். மனிதன் ஆன்மிகரீதியாக தன்னை உயர்த்திக் கொண்டு, இறைவனோடு கலக்க வேண்டும் என்பதையே இவ்விழா வலியுறுத்துகிறது. அதற்காக ஒவ்வொரு ஆச்சாரியரும் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.