மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ஜாக்கி’. பிகே 7 ஸ்டூடியோஸ் தயாரித்து வழங்கும் இந்தப் படம் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
‘மட்டி’யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி பிரகபல் கூறும்போது, “மதுரையில் கிடா சண்டை பந்தயத்தை நேரில் பார்த்தேன். அதைப் பார்க்கும் போதே, சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சண்டைக்குள் ஒரு வாழ்வியலையும், கிடாவுக்கும் அதை வளர்ப்பவர்களுக்குமான பிணைப்பையும் கவனித்தேன். அது தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போன விளையாட்டு என்பது புரிந்தது. உடனே மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022-ம் ஆண்டு முதல் அங்கேயே தங்கி கதையை எழுத ஆரம்பித்தேன்.
பிறகு 4 வலுவான கிடாக்களைத் தேடி வாங்கி கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களை அதனுடன் பழக வைத்துப் படத்தை உருவாக்கியுள்ளேன். திரையில் கதாநாயகனுக்கும், கிடாவுக்கும் இருக்கும் பிணைப்பு யதார்த்தமாக இருக்கும். வில்லன் கதாபாத்திரம் வலிமையானது. அந்த கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக 3 வருடம் உழைத்துள்ளேன். கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.