Last Updated : 27 Sep, 2025 09:08 AM
Published : 27 Sep 2025 09:08 AM
Last Updated : 27 Sep 2025 09:08 AM

லக்னோ: உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகில் உள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து பயாக்பூர் துணை ஆட்சியர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அங்கு ஆய்வு நடத்தச் சென்றனர்.
அப்போது அதிகாரிகள் மாடிக்குச் செல்வதை மதரசா நடத்துபவர்கள் தடுக்க முயன்றனர். எனினும் போலீஸார் உதவியுடன் அக்கட்டிடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாடியில் இருந்த கழிப்பறை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பெண் போலீஸார் அதன் கதவை திறந்தபோது, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 40 சிறுமிகள் ஒருவர் பின் ஒருவராக கழிப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.
மதரசாவில் 8 அறைகள் இருக்கும்போது கழிப்பறைக்குள் சிறுமிகள் இருந்தது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறுமிகள் பீதியடைந்து தாங்களாகவே கழிப்பறைக்குள் பூட்டிக்கொண்டதாக ஆசிரியை ஒருவர் கூறினார்.
அந்த மதரசா அரசின் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து அதை மூடவும் சிறுமிகளை பத்திரமாக அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பரைச் கூடுதல் எஸ்.பி. ராமானந்த் பிரசாத் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் அல்லது அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை. புகார் அளித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
FOLLOW US