வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்று முன்தினம் அமெரிக்கா வந்தடைந்தனர். இருவரும் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு நேற்றுமுன்தினம் மாலை 4.52 மணிக்கு சென்றனர். அப்போது அதிபர் ட்ரம்ப் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்.
அவரை சந்திப்பதற்காக ஷெபாஸ் ஷெரீப்பும், அசிம் முனிரும் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் காத்திருந்தனர். அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வந்தார். பின்னர் பிரதமர் ஷெபாஸ், ராணுவ தளபதி அசிம் ஆகியோரை தனது ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் மாலை 6.18 மணிக்கு ஷெபாஸ், அசிம் இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர்.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் இருவரும் சிறந்த தலைவர்கள்” என்று கூறினார்.