புதுடெல்லி: பிஹாரில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியை அவர் வழங்கினார். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநில அரசு சார்பில் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி பிஹாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒரு பெண்ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து சாதனை படைக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் உறுதி அளித்து உள்ளார்.
இந்தச் சூழலில் பிஹார் அரசின் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். அப்போது மாநிலம் முழுவதும் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக ரூ.7,500 கோடி வழங்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிக முக்கியமான திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன்மூலம் பிஹார் பெண்களின் கனவுகள், நனவாகும். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ஒரு பைசாவைகூட இடைத்தரகர்களால் பறிக்க முடியாது.
பிஹார் மக்களின் முன்னேற்றத்துக்காக நானும் முதல்வர் நிதிஷும் அயராது பாடுபட்டு வருகிறோம். தற்போது தொடங்கப்பட்டு இருக்கும் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் மளிகை கடைகள், பாத்திரக் கடை, அழகு சாதனப் பொருட்கள் கடைகள், பொம்மை கடைகள் உட்பட பல்வேறு சிறிய வணிக நிறுவனங்களை தொடங்க உள்ளனர். சிலர் கறவை மாடுகள், மீன் வளர்ப்பு, ஆடுகள் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் கால் பதிக்க உள்ளனர்.
மத்திய அரசு சார்பில் கிராமங்களில் 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாகி விட்டனர். இந்த திட்டத்தில் பிஹாரை சேர்ந்த லட்சக்கணக்காண பெண்கள் பயன் பெற்றுள்ளனர்.
மேலும் முத்ரா தொழில் கடன் உட்பட பல்வேறு வகையான கடன்கள் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் பிஹாரில் ஆட்சி நடத்தியது. அப்போது அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி இருந்தது. மாநிலம் முழுவதும் காட்டாட்சி நடைபெற்றது.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பிஹார் அதிவேகமாக முன்னேறி வருகிறது. முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். விழாவின்போது திட்ட பயனாளிகளுடன் அவர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
40% பெண்களுக்கு நிதியுதவி: பிஹாரில் மொத்தம் 3.41 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்கட்டமாக 75 லட்சம் பெண்களுக்கு முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தில் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அப்போது மேலும் பல லட்சம் பெண்கள் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பிஹார் பெண் வாக்காளர்களில் சுமார் 40 சதவீத பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. வரும் நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.