புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால் இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. உக்ரைன் உடனான மோதல் காரணமாக உருவான சர்வதேச தடைகளைத் தொடர்ந்து ரஷ்யா கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வழங்க தொடங்கியது.
இதையடுத்து, இந்தியா தனது மொத்த தேவையில் 90% சதவீதத்தை ரஷ்யாவிடமிருந்தே இறக்குமதி செய்து வருகிறது. இதனால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், இதேபோன்ற சாதகமான நிலை, ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போதுதான் நீடிக்கும்.
புளும்பெர்க் அறிக்கையின்படி, இந்த வாரத்தில் அமெரிக்காவுக்கு சென்ற இந்திய அதிகாரிகள் கச்சா எண்ணெய் தொடர்பாக தங்களது இந்த நிலைப்பாட்டை அமெரிக்க அதிகாரிகளிடம் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எண்ணெய் வாங்குவதை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தினால் அது உலகளாவிய விலை ஏற்றத்தை தூண்டக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாகவே, ஈரான், வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அமெரிக்காவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பின்லாந்தின் எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) தரவின்படி, 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா சுமார் ரூ.13.39 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இது 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.