திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாரளமாக நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதுபோல் நன்கொடை வழங்குவோருக்கு, அவர்களின் நன்கொடைக்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
அதன் விவரங்கள் வருமாறு: ஒவ்வொரு ரூ. 10 ஆயிரம் நன்கொடைக்கும், ஒரு நபருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது. இதுவே ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினால், அந்த பக்தர் வாணி அறக்கட்டளை மூலம் 9 முறை சுவாமியை வெகு அருகில் தரிசனம் செய்து கொள்ளலாம்.
ரூ.5 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்கள், ஆண்டுக்கு ஒருமுறை சுபதம் நுழைவுவாயில் வழியாக 5 பக்தர்களுக்கு தரிசன பாக்கியம் வழங்கப்படும். ஒரு நாள் திருமலையில் தங்குவதற்கு அறையும் வழங்கப்படும். மேலும், தரிசனம் முடிந்ததும் சிறிய லட்டு பிரசாதங்கள் 6, ஒரு ரவிக்கை, ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும்.
ரூ.10 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்கள், ஆண்டுக்கு 3 முறை 5 பக்தர்கள் சுபதம் நுழைவுவாயில் வழியாக சுவாமியை தரிசிக்கலாம். இவர்களுக்கு திருமலையில் தொடர்ந்து 3 நாட்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து தரப்படும். மேலும், ஒவ்வொரு முறையும் தரிசனம் செய்யும்போது, 10 சிறிய லட்டு பிரசாதம், 5 மகா பிரசாதம் வழங்கப்படும். இத்துடன் ரவிக்கை, துண்டு ஆகியவை வழங்கப்படும்.
ரூ.25 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். மேலும் 3 நாட்களுக்கு திருமலையில் தங்குவதற்கு விடுதியும் வழங்கப்படும். மேலும் 20 சிறிய லட்டு பிரசாதங்கள், 10 மகா பிரசாதங்கள், ஒரு ரவிக்கை,ஒரு துண்டு, 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.50 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்காக ஆண்டுக்கு 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். ஒரு முறை 5 பேருக்கு சுபதம் நுழைவுவாயில் வழியாக சுவாமி தரிசனம் வழங்கப்படும். தரிசனம் முடிந்ததும் இவர்களுக்கு 4 பெரிய லட்டு பிரசாதம், 5 சிறிய லட்டு பிரசாதங்கள், 10 மகா பிரசாதங்கள், ஒரு துண்டு, ஒரு ரவிக்கை, 5 கிராம் எடையில் தங்க நாணயம், 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.75 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள் 5 பேருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும். 3 முறை 5 பேருக்கு பிரேக் தரிசனம், 2 முறை சுபதம் நுழைவுவாயில் வழியாக 5 பேர் சுவாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இவர்களுக்கு 3 நாட்கள் வரை திருமலையில் தங்கும் அறைகள் வழங்கப்படும். மேலும் 6 பெரிய லட்டுகள், 10 சிறிய லட்டுகள், 10 மகா பிரசாதங்களும் வழங்கப்படும். இது தவிர ரவிக்கை, துண்டு, 5 கிராம் எடையில் தங்க நாணயம், 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.1 கோடி வரை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை 5 பேருக்கு சுப்ரபாத சேவை வழங்கப்படும். ஆண்டுக்கு 3 முறை விஐபி பிரேக் தரிசனமும், 3 முறை சுபதம் நுழைவுவாயில் மூலமாக சுவாமி தரிசன ஏற்பாடுகளும் செய்யப்படும். திருமலையில் இவர்கள் 3 நாட்கள் தங்க வைக்கப்படுவர். இவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 8 பெரிய லட்டு, 15 சிறிய லட்டுகள்,10 மகா பிரசாதங்கள், ஒரு ரவிக்கை,ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை இவர்களுக்கு 5 கிராம் எடையில் தங்க நாணயம், 50 கிராம் எடையில் வெள்ளி டாலர் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.1 கோடிக்கும் மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை 5 பேருக்கு சுப்ரபாத சேவை வழங்கப்படும். 3 முறை 5 பேருக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். 4 முறை 5 பேருக்கு சுபதம் நுழைவுவாயில் வழியாக தரிசனம். 10 பெரிய லட்டுகள், 20 சின்ன லட்டுகள், 10 மகா பிரசாதங்கள், ஒரு துண்டு, ஒரு ரவிக்கை ஆகியவை வழங்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு முறை வேத பண்டிதர்களால் ஆசீர்வாதம் செய்யப்படும். ஆண்டுக்கு ஒருமுறை 5 கிராம் எடையில் தங்க நாணயமும், 50 கிராம் எடையில் வெள்ளி டாலரும் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கினால், வருமான வரி 80 (ஜி)யின் படி வரி விலக்கு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.