சென்னை: தமிழக காவல் துறையின் புதிய டிஜிபி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் பணிஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய டிஜிபியை தேர்வு செய்யாமல் நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனுக்கு கூடுதலாக சட்டம் – ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் உள்பட 8 பேரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
நிறைவாக, முதல் 3 இடங்களில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் விரைவில் டிஜிபியாக நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.