சென்னை: பாமக சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை ன், இருக்கையும் ஒதுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலரிடம் அன்புமணி தரப்பினர் மனு அளித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோர் வழக்கறிஞர் பாலுவுடன் நேற்று சென்னை தலைமைச் செயலகம் சென்று, சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனை சந்தித்தனர். ராமதாஸ் ஆதரவாளரான ஜி.கே.மணியை சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மனு கொடுத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பாலு கூறியதாவது:
ஒருமனதாக தேர்வு: சட்டப்பேரவைக் குழு தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஒருமனதாக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தேர்வானார். கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்து, கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளோம்.
மேலும், கடந்த ஜூலை 3-ம் தேதி மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரை கொறடாவாக நியமிக்க கடிதம் அளித்தோம். அதற்கு எந்த பதிலும் தெரிவிக்காதததால், அதுகுறித்தும் கடிதம் அளித்துள்ளோம். பாமகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், பாமக நிர்வாகி என்றே அருள் எம்எல்ஏ பேசி வருகிறார்.
இது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதால், அவரை எம்எல்ஏவாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கட்சி பிரதிநிதியாக அழைக்க முடியாது என்றும் கூறியுள்ளோம். மேலும், அன்புமணியை தலைவராக ஏற்று தேர்தல் ஆணையம் அளித்த கடிதத்தையும் கொடுத்துள்ளோம். மாம்பழம் சின்னமும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, நாங்கள் அளித்த கடிதத்தை பேரவைத் தலைவர் விரைவில் பரிசீலிப்பார் என நம்புகிறோம். அதேபோல, எங்களது கடிதம் அடிப்படையில், சட்டப்பேரவையில் பாமக குழு தலைவருக்கான இருக்கையை வெங்கடேஸ்வரனுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏவான அருள் நேற்று தலைமைச் செயலகம் சென்று, தலைமைச் செயலர் நா.முருகானந்தத்திடம் ஒரு கடிதம் அளித்தார்.
ராமதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தைலாபுரம் தோட்டம் புதுச்சேரி சாலையில் தனியாக உள்ளது. ஆனால், 6 போலீஸார் மட்டுமே பாதுகாப்புக்காக உள்ளனர். தற்போது ராமதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகிறோம்.
தைலாபுரத்துக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவதால், மெட்டல் டிடெக்டர் கருவி வேண்டும், கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். டிஜிபியிடமும் மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.