சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிச.5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மக்களுக்குமான சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்.
அதுவரை இடைக்கால ஏற்பாடாக வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டைத் தடுக்கின்ற நீதிமன்ற தடையாணையைப் போக்கி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்து டிச.5-ம் தேதி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக அறவழியிலான தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென்று வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவு எடுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து முறைப்படுத்தவும், வன்னியர்களின் தனி ஒதுக்கீட்டுக்கான நியாயத்தை அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவுபடுத்தவும் 9 பேரைக் கொண்ட போராட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் வழிகாட்டுதலில், வன்னியர்களின் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த பாட்டாளி சொந்தங்களும், வன்னிய உறவுகளும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து, அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.