‘96’ படத்தின் நடிகர்கள் இல்லாமல் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று இயக்குநர் பிரேம் குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்தினை எழுதியுள்ளார் பிரேம் குமார். முதல் பாகத்தின் முடிவில் இருந்தே 2-ம் பாகம் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ‘96’ 2-ம் பாகத்தினை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்கள் இப்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுடைய சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ஒத்திவைத்துவிட்டார்கள். ஆனால், முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் இல்லாவிட்டால் 2-ம் பாகத்தினை உருவாக்கவே மாட்டேன் என்று பேட்டியொன்றில் உறுதிப்பட தெரிவித்துள்ளார் பிரேம் குமார்.
சமீபத்தில் ‘96’ 2-ம் பாகத்தின் கதையினை படித்துவிட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அந்தளவுக்கு அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும், தான் இதுவரை எழுதியுள்ள கதையிலும், இனிமேல் எழுதயிருக்கிற கதையிலும் ‘96’ 2-ம் பாகத்தின் கதையே சிறந்தது எனவும் பிரேம் குமார் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது படமாக உருவாகுமா என்பது தான் இப்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறது.