திருச்சி: ‘‘விவசாயிகளுக்கு மட்டும் 56 வாக்குறுதிகளை கொடுத்தது திமுக. அவற்றில் வெறும் 8 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது. மீதம் 48 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றி விட்டது’’ என்று திருச்சியில் விவசாயிகள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் சாமி தாிசனம் செய்தார்.
தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தம்பதி சமேதராக சென்று வழிபாடு நடத்தினர். அதன்பின், திருச்சி மாம்பழச்சாலை காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் டெல்டா பகுதி விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.
இறுதியாக விவசாயிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 22 மாவட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி இருக்கின்றன. காவிரி ஆறு நமக்கு கிடைத்த வரம். தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களில் 5 கோடி மக்கள் காவிரி ஆற்றை நம்பி இருக்கிறார்கள். காவிரி ஆறு இயற்கை கொடுத்த வரம் அந்த வரத்தை சரியாக நாம் பயன்படுத்தவில்லை. ஒரு மாதம் தமிழ்நாட்டில் பெய்யும் மழையை பயன்படுத்தி மற்ற 11 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
அதுதான் சிறந்த நீர் மேலாண்மை. முன்பு 45 நாட்கள் பெய்த மழை தற்போது 30 நாட்கள் பெய்கிறது. ஆனால் 45 நாட்கள் கிடைக்க வேண்டிய மழை நீர் நமக்கு கிடைக்கிறது ஆனால் அவற்றை நாம் முறையாக சேமிக்கவில்லை. 2023-ல் 520 டிஎம்சி மழைநீர் வீணாக சென்று கடலில் கடந்தது.
இந்த ஆண்டும் அதேபோல பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல்தான் உள்ளது. காரணம் தமிழ்நாட்டில் மழை நீரை சேமிக்க உரிய கட்டமைப்பு இல்லை. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாடு பட்ஜெட்டை நீர் பாசன திட்டத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்.
நீர்ப்பாசன திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்தால் தான் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். தமிழ்நாட்டில் 63 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன தேவை உள்ளது? என்பது தமிழக அரசுக்கு தெரியவில்லை.
விவசாயிகளுக்கு தேவையான நீரை கொடுக்க வேண்டும். மண்ணை பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் விளைச்சலுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு விளைப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு மட்டும் 56 வாக்குறுதிகளை திமுக கொடுத்தது.
அவற்றில் வெறும் 8 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியது. மீதம் 48 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றி விட்டது. கர்நாடக அரசு 6 மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் விவசாயிகளுக்காக கிருஷ்ணா நதியின் குறுக்கே செயல்படுத்தும் நீர்ப்பாசன திட்டத்துக்காக ரூ.77 ஆயிரம் கோடியை சமீபத்தில் ஒதுக்கியுள்ளது.
ஆனால் நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. கொள்ளிடம் ஆறு மொத்தம் 110 கிலோ மீட்டர்களைக் கொண்டது. ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணைகளை கட்டினால் விவசாயிகளுக்கும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும் குடிநீர் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள்.
டெல்டா பகுதி என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரம் எப்படிப்பட்ட டெல்டா பகுதி இன்றைக்கு எவ்வாறு சீரழிந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லுக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அதனை தடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒடிசாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஊக்கத் தொகையாக 800 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆந்திராவில் 500 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 131 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு 130 ரூபாய் கொடுத்து வந்தது. தற்போது பெரிய மனது வைத்து ஒரு ரூபாய் சேர்த்து கொடுக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
ஆற்றுக்குள் ஆர்ப்பாட்டம்: முன்னதாக, ‘கடலில் கலந்து வீணாகும் நீரை, காவிரி- அய்யாறு திட்டம் மூலம் திருப்பி விட வேண்டும். இதன் மூலம் சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தரிசாக கிடக்கும் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து அன்புமணி ராமதாஸ் ஆற்றுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.