புதுச்சேரி: விஜய்யின் பின்னால் வரும் கூட்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை, பெங்களூரு புகழேந்தி இன்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை கட்சியை முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.
எடப்பாடி என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறார். ஆர்எஸ்எஸ் கொள்கையை படிக்க ஆரம்பித்த பிறகு எம்ஜிஆர், அண்ணா, பெரியார் யார் என்பதில் அவருக்கு பிரச்சினையாகி உள்ளது. சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துவிட்டார். அவர், நான்கரை ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்திருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது. 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு தெரிந்தது கூட பழனிசாமிக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பெரிய குழப்பம் நிலவுகிறது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். உடனே மத்திய உள்துறை அமைச்சர் அவரை அழைத்து பொறுமை காக்கும்படி கூறியதை அடுத்து, அவர் தனது வேகத்தை குறைத்துவிட்டார். இந்த ஆபரேஷன் அனைத்தும் டெல்லியில் இருந்து நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சொல்வதைத்தான் அதிமுக தலைவர்கள் கேட்டு நடக்கின்றனர். அது மாற வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டாம் என்று சொல்லவே அண்ணாமலை, டிடிவி தினகரனை சந்தித்தார். அந்த கூட்டணிக்கு கூப்பிடச் செல்லவில்லை. அண்ணாமலை என்ற பெயருக்குதான் பாஜக ஓடிக்கொண்டிருந்தது. அவர் இல்லை என்பதால் தமிழகத்தில் பாஜக தரைமட்டமாகிவிட்டது. அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி மீது கடும்கோபத்தில் உள்ளார். அது எப்போது வெளிபடும் என்பது யாராலும் சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி ஜோக்கர் போன்று மாறிவிட்டார். தமிழகத்தில் அவரது சுற்றுப்பயணம் வீழ்ச்சியில் தான் முடியும்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் வேலை எளிதாக மாறிவிட்டது. திமுகவுக்கு, விஜய்யின் தவெகவுடன் தான் போட்டி. அதிமுக நான்காவது இடத்துக்கு சென்றுவிடும். சீமான் மூன்றாவது இடத்துக்கு வந்துவிடுவார். பாஜகவின் வலையத்துக்குள் தான் அதிமுக இருக்கிறது. அதிமுகவை பாஜக கைப்பற்றிவிட்டது.
அரசியலில் ஆதரவற்றவராக எடப்பாடி பழனிசாமி நிற்கின்றார். தமிழக திமுக ஆட்சி, திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, மாடல் ஆகியவற்றை காத்து, மத்திய அரசை எதிர்த்து நிற்பதாக இருக்கிறது. அதே நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கவில்லை.
கொடநாடு, ஜெயலலிதா இறப்பு போன்றவைகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத குறைகள் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது. அதனை முதல்வர் சரி செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போன்று ஜெயலலிதா இறந்தபிறகு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதனை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை. ஆகவே விஜய் இளைஞராக வருகின்றார். அவரது பின்னால் இளைஞர் பட்டாளம் நிற்கிறது. அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விஜய்யின் பின்னால் செல்லும் கூட்டம் ஓட்டுக்காக வந்த கூட்டம். அது மாறாது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது. எனவே அது தொடர வேண்டும் என்றார்.