பாட்னா: பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்களுக்கு நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு ரூ.10,000 அளித்துள்ளது என பிரியங்கா காந்தி வத்ரா விமர்சித்துள்ளார்.
பிஹார் அரசின், ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ அம்மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். பாட்னாவில் நடைபெற்ற தொடக்க விழாவில், முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 செலுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ரூ.7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிஹார் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிஹார் மாநில மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் கலந்துரையாட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, இன்று பாட்னாவுக்கு வருகை தந்தார். பாட்னாவில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சதகத் ஆசிரமத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பிரியங்கா காந்தி வத்ரா கேட்டறிந்தார்.
பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வத்ரா, “முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில், பிஹாரில் உள்ள பெண்களுக்கு மாநில அரசு இன்று தலா ரூ.10,000 நிதி வழங்கி உள்ளது. பாஜக – ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி இந்த மாநிலத்தில் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இதற்கு முன் ஏன் பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்கவில்லை? பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது ரூ.10,000 கொடுத்துள்ளார்கள். அவர்களின் ஒரே நோக்கம் இதுமட்டும்தான். ஆனால், பெண்கள் புத்திசாலிகள், பொறுப்புள்ளவர்கள். அவர்கள் தேர்தலின்போது தங்கள் பலத்தைக் காண்பிப்பார்கள்.
எந்தக் கட்சி உங்களுக்கு மரியாதை அளிக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மரியாதை என்பது தேர்தலுக்கு முன், கொஞ்சம் பணம் கொடுப்பதல்ல. அது வாக்குகளை வாங்குவதற்கான முயற்சி. பெண்கள் நியாயமான மாதச் சம்பளத்தைப் பெறும்போதுதான் அவர்கள் மதிக்கப்படுவார்கள். பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க அரசாங்கம் உதவ வேண்டும். பள்ளிக்குச் சென்று வருவது பாதுகாப்பானது என உங்கள் மகள்கள் உணர வேண்டும். இத்தகைய மரியாதையை நிதிஷ் குமார் அரசு உங்களுக்கு ஒருபோதும் வழங்காது.
எனது சகோதரர் ராகுல் காந்தி, சமூக நீதிக்காக போராடி வருகிறார். பெண்கள் நீதியையும் மரியாதையையும் பெற வேண்டும் என அவர் விரும்புகிறார். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலின்போது, நீங்கள் உங்கள் நிலையை எண்ணிப் பார்த்து உங்களுக்கு நீதியையும் மரியாதையையும் வழங்கும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீதியையும் மரியாதையையும் நீங்கள் விரும்பினால், நீங்கள் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி, பெண்களுக்காக பல்வேறு உத்தரவாதங்களை வழங்கி உள்ளது. பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும், நிலமற்ற குடும்பங்களுக்கு நகரப்புறங்களில் 3 சென்ட் நிலமும் கிராமப்புறங்களில் 5 சென்ட் நிலமும் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை மகா கூட்டணி வழங்கி உள்ளது. எனவே, பிஹாரில் மகா கூட்டணியின் ஆட்சி அமைய நீங்கள் துணை நிற்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.