தமிழகத்தில் மிஷன் வாத்சல்யா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் இத்திட்டத்தில் பணிபுரியும் 513 பணியாளர்கள் பணிப் பலன் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகள் நலன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நாடு முழுவதும் விரிவான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 2012-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 2021- 22ம் நிதியாண்டில் ‘மிஷன் வாத்சல்யா’ என்று பெயர் மாற்றப்பட்டு மத்திய அரசின் நிதியுதவி மூலம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் சிறார் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சித்திரவதை ஆகியவற்றில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் முன்னுரிமைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான ஒரு வழிகாட்டியாக உள்ளது.
மேலும் சிறார் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் 513 பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, மாநில காப்பீட்டுத் திட்டப் பலன், சமூகப் பாதுகாப்பு பலன், சலுகைகள் உள்ளிட்ட பணிப் பலன்கள் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் செ.கார்த்திக் கூறியதாவது: கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி அன்று மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய கடிதக் குறிப்பில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி, ஊழியர் மாநில காப்பீட்டுத் திட்டப் பலன்கள் போன்ற சமூகப் பாதுகாப்புப் பலன்கள் அல்லது பிற அமைச்சகங்கள் துறைகளின் திட்டங்களின் கீழ் உள்ள சலுகைகள் பணியாளர்கள் எண்ணிக்கை நியமனங்கள், பணியாளர்கள் சம்பளம் நிர்ணயம், செயல்திட்ட கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று உறுதிப்படுத்தியது.
இத்திட்டத்துக்கு என்று தமிழ்நாடு சமூக நலத்துறையின் மூலமாக ரூ.175.20 கோடியில் பிரத்யேகமாக திட்ட அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், கணக்காளர்கள், ஆலோசகர்கள், தகவல் தொகுப்பாளர்கள், தரவு உள்ளீட்டாளர்கள் உட்பட மொத்தம் 513 பணியாளர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இப்பணியாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான உரிமை மீறல்களைக் கண்காணித்து குழந்தைகளுக்கான சட்டங்களை நடைமுறைப் படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழகத்தில் இதுபோன்ற ஒப்பந்தப் பணியாளர்களுக்காக மத்திய அரசு நிர்ணையித்த வருங்கால வைப்பு நிதி, மாநில காப்பீட்டு திட்டப் பலன், சமூக பாதுகாப்புப் பலன், சலுகைகள் உள்ளிட்ட பணிப் பலன்கள் வழங்கப்படாத நிலை உள்ளது. தற்போது சம்பளப் பாக்கியை வழங்காமல் தமிழக அரசு அலைக்கழிப்பதால் தொடர் விரக்தியில் பணியாளர்கள் செயல்படாத நிலையில் உள்ளனர். இத்திட்டச் செயல்பாடுகள் முடங்கும் அபாயத்தில் உள்ளன. இதனால் குழந்தைகள் நலன் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பணியாளர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படாததால் டீன் ஏஜ் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விசாரணை மெத்தனப் போக்கு, வழக்குகள் தேக்கம் என்று முழு வீச்சில் செயல்பாடுகள் இல்லாமல் இத்திட்டம் நாளுக்கு நாள் செயலிழந்து வருகிறது. இத்திட்டத்தைப் பற்றிய செயல்பாடு குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத் திடம் ஆர்டிஐ மூலமாக கோரிய தகவலுக்கு, மாநில அரசைத்தான் கேட்க வேண்டும் என்று தமிழக அரசை கைகாட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.