லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிய பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உண்ணாவிரதக் களத்தில் இருந்த போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடும் வகையில் தூண்டிவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? – லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் மொழி, கலாச்சாரம், நாகரீகம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அந்தப் பகுதிகளில் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் நேற்று முன் தினம் முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. ஆனால், அது வன்முறையில் முடிந்தது. 4 பேர் உயிரிழந்தனர்.70 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு எதிர்வினையாற்றிய சோனம் வாங்சுக், “மத்திய உள்துறை அமைச்சகம், லடாக் வன்முறையில் என்னை பலிகிடா ஆக்கப் பார்க்கிறது. என்னை கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள்.
நானும் கைதாவதற்கு தயார் தான். ஆனால், என்னை சுதந்திரமாக விடுவதைவிட; என்னைக் கைது செய்வது அரசுக்கு கூடுதல் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். பிரச்சினைக்கு என்னை பலிகடா ஆக்கும் அரசியலை பாஜக கைவிடலாம். கலவரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் என்னையோ அல்லது காங்கிரஸ் கட்சியையோ குறை சொல்வதை விடுத்து அதன் வேர் அறிந்து சரி செய்ய முற்படலாம். அவர்கள் (மத்திய அரசு) பழிபோடும் அரசியலின் தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கலாம். ஆனால், எல்லா வேளையிலும் அது பலனளிக்காது. இப்போது அவர்களின் தந்திரத்தைவிட புத்திசாலித்தனம் தான் பலனளிக்கும். இளைஞர்கள் ஏற்கெனவே விரக்தியில் உள்ளனர்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாங்சுக் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா? இல்லை வேறேனும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்ற தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை: இதனிடையே போராட்டத்துக்கு காரணமான சோனம் வாங்சுக் நிறுவிய ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நிதியுதவி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், வாங்சுக் கடந்த பிப்.6-ம் தேதி பாகிஸ்தானும் சென்று வந்துள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், சோனம் வாங்சுக் தலைமையிலான லடாக் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்துக்கு வெளிநாட்டு நன்கொடை (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் (எப்சிஆர்ஏ) அளிக்கப்பட்ட லைசென்ஸை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது.