புதுச்சேரி ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு இலவசமாக மளிகை, சர்க்கரை, எண்ணெய் தர அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான டெண்டரை கான்பெட் கோரியுள்ளது. வரும் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்த தீபாவளிக்கு முன்பாக திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரை இலவசமாக தரும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரேஷனில் அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷனில் அரிசி தரப்படவில்லை. அரிசிக்கான மறு டெண்டர் கோரி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரேஷனில் விடுபட்ட அனைத்து மாதங்களுக்கும் இலவச அரிசியை தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வரும் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரியில் தீபாவளிக்கு இலவச பொருட்கள் தர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் கான்பெட் செய்து வருகிறது.
இதுதொடர்பாக புதுச்சேரி கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பான கான்பெட் நிர்வாக இயக்குநர் ஐயப்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி முழுக்க தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு மளிகை, சர்க்கரை, எண்ணெய் இலவச விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்காக குறுகிய கால மின்னணு ஏலம் விடப்படுகிறது. டெண்டர் எடுக்க விரும்புவோர் வரும் அக். 3-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அரசு வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்த போது, “தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மளிகை, சர்க்கரை, எண்ணெய் வழங்க திட்டமிட்டுள்ளோம். அத்துடன் விடுபட்ட அனைத்து மாதங்களுக்கான இலவச அரிசியும் ரேஷனில் விரைந்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தீபாவளிக்கு முன்பாகவே மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது” என்று தெரித்தனர்.