சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் ஈழம், காஷ்மீர் பிரச்சினை, நீயூட்ரினோ மற்றும் சேலம் எட்டு வழிச் சாலை திட்டங்கள் குறித்து பேசும் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி துணை காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும், சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், கலவரத்தை தூண்டும் வகையில் சீமான் பேசவில்லை என்றும் உள்நோக்கத்துடன் போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.