கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, தமிழக காங்கிஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகையை அவதூறாக பேசியதாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை கண்டித்து இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் திருக்கழுக்குன்றம் தெற்கு வட்டார தலைவர் சாகுல்ஹமீது ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரை அவதூறாக பேசியதாக, அதிமுக பொதுச்செயலாளரை கண்டித்து அக்கட்சியினர் கண்டன முழக்கமிட்டனர். மேலும், அக்கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இதில், அதிமுக பொதுச்செயலாளர் மன்னிப்பு கேட்கும் வரையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், புதுப்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் நிஜாமுதீன், செய்யூர் தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யாசர்அராபத் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.