அடுத்ததாக நானி நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதனையும் டிவிவி நிறுவனமே தயாரிக்கும் என தெரிகிறது.
பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. டிவிவி நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் வசூல் இரண்டையும் சேர்த்து ரூ.100 கோடியைத் தாண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
’ஓஜி’ படத்தினைத் தொடர்ந்து நானி நடிக்கவுள்ள படத்தினை இயக்கவிருப்பதாக சுஜித் தெரிவித்திருக்கிறார். ‘ப்ளடி ரோமியோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் டார்க் காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த கதையாக இருக்கும் எனவும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இப்படம் படமாக்குவதற்கு மிகவும் கடினம் எனவும், அதையே சவாலாக எடுத்துக் கொண்டு எடிட், இசை உள்ளிட்டவற்றில் வித்தியாசப்படுத்த இருப்பதாகவும் சுஜித் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சுஜித் இயக்கியுள்ள ‘ஓஜி’ படம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக ‘ஏ’ சான்றிதழ் படம் என்பதால் பல்வேறு சிறுவயதினரை திரையரங்க உரிமையாளர்கள் உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டனர். இது தொடர்பாக திரையரங்க நிர்வாகத்தினரிடம் குடும்பத்தினர் சண்டையிடும் வீடியோ பதிவுகளையும் இணையத்தில் காண முடிகிறது.