புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாகவும் (சிடிஎஸ்), ராணுவ விவகார துறையின் செயலராகவும் அனில் சவுகான் (64) பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 30-ம் தேதி நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், அனில் சவுகானின் பதவிக் காலத்தை மே 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிந்தூர் நடவடிக்கையின் போது முப்படைகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் அனில் சவுகான் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
சிடிஎஸ் ஆக நியமிக்கப்பட்டதிலிருந்து, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இடையே கூட்டுறவை மேம்படுத்துவதில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் இறந்ததைத் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக அந்தப் பதவி காலியாக இருந்தது. அதன்பிறகு, சிடிஎஸ் பொறுப்பை அனில் சவுகான் ஏற்றுக்கொண்டார்.