புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எளிமை, பணிவு, நேர்மை ஆகிய பண்புகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான அவரது துணிச்சலான முடிவுகள், வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும். மேலும், அவரது எளிமை, பணிவு மற்றும் நேர்மை ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகத்தின் மூலம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேசக் கட்டுமானத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நாங்கள் நினைவு கூர்கிறோம். இந்திய பொருளாதார மாற்றத்தின் மென்மையான சிற்பி அவர். பணிவும் ஞானமும் கொண்ட அவர், அமைதியுடனும் கண்ணியத்துடனும் தன்னை நடத்திக் கொண்டார். தனது செயல்கள் தனது வார்த்தைகளை விட சத்தமாகப் பேச அனுமதித்தார். பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை, புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறந்தது. ஒரு செழிப்பான நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியதோடு, எண்ணற்ற குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டது.
நியாயம் மற்றும் உள்ளடக்கிய தன்மையில் அவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்ட நலத்திட்ட நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி, இரக்கத்துடன் கைகோர்த்துச் செல்வதை உறுதி செய்தார். பொது வாழ்வில் நேர்மை என்பது சாத்தியம் மட்டுமல்ல, சக்தி வாய்ந்தது என்பதை அவரது தலைமை நமக்குக் காட்டியது.
நேர்மை, அறிவுத்திறன் மற்றும் தன்னலமற்ற சேவையின் நீடித்த அடையாளமாக இந்தியர்களுக்கு என்றும் அவர் இருப்பார். வலுவான, உள்ளடக்கிய இந்தியாவின் விருப்பங்களில் அவரது மரபு நிலைத்திருக்கும். அவரது பிறந்தநாளில் எங்கள் பணிவான அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதையுடன் கூடிய அஞ்சலியை செலுத்துகிறேன். மன்மோகன் சிங் தனது தொலைநோக்குப் பார்வையின் மூலம் நாட்டை அசாதாரண முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்றார். அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார செயல்பாடுகளின் மூலம், ஏழைகள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் வளப்படுத்தினார். அவரது பணிவு, எளிமை, கடின உழைப்பு, நேர்மை மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி. பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகள் அவர், நமது நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறோம்” என தெரிவித்துள்ளார்.