வாஷிங்டன் டிசி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நேற்று சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று தலைநகர் வாஷிங்டன் சென்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் உடன் இருந்தார். பிரதமராக இருந்த இம்ரான் கான், 2019-ல் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரைச் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரை சந்திப்பது இதுவே முதல்முறை.
டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு, அவரை ஷெபாஸ் ஷெரீப் வெள்ளை மாளிகையில் சந்திப்பது இதுவே முதல்முறை. சில நாட்களுக்கு முன்பு ஐநா பொதுச் சபை கூட்டத்தின் இடையே, அதிபர் ட்ரம்ப், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது, காசா மீதான இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்குப் பிறகு ஷெபாஸ் ஷெரீப், ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், டொனால்டு ட்ரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் ஷெபாஸ் ஷெரீப்பும் அசிம் முனீரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, அனைத்து கதவுகளும் மூடப்பட்டு ரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணுவத் தளபதி அசிம் முனீருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் உடன் இருந்தனர்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் பங்கை வெளிப்படையாக ஆதரித்ததற்காக ட்ரம்ப்புக்கு ஷெரீப் நன்றி தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். ட்ரம்ப்பை, அமைதியின் மனிதர் என ஷெரீப் வர்ணித்தார். உலகின் பல பகுதிகளில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் ட்ரம்ப்பின் நேர்மையான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தைரியமான, துணிச்சலான, தீர்க்கமான தலைமைப்பண்பை ட்ரம்ப் கொண்டுள்ளதாகவும் ஷெரீப் பாராட்டினார்.
மேலும், கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் செய்த மத்தியஸ்தத்துக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இதன்மூலம், தெற்காசியாவில் ஒரு பெரிய பேரழிவைத் தவிர்க்க ட்ரம்ப் உதவியதாக பிரதமர் கூறினார். மேலும், தனது வசதிக்கு ஏற்ப பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு ட்ரம்ப்புக்கு பிரதமர் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்க வைத்த ட்ரம்ப்: அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு ஷெபாஸ் ஷெரீப்பும் அசிம் முனீரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றுள்ளனர். அவர்களை, அங்கிருந்த மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது, ட்ரம்ப் தனது அலுவலகப் பணியில் இருந்ததால் இருவரும் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு நேரம் காக்க வைக்கப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை. என்றபோதிலும், அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பு தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வ அறிக்கை, புகைப்படன் என எதையும் இதுவரை வெளியிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.