திருவள்ளூர்: ‘வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அமமுக இடம்பெற கூடிய கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக அமையும்’ என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக சார்பில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளர் ஜி. செந்தமிழன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.வேதாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக சார்பில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து, டி.டி.வி.தினகரன், கட்சி நிர்வாகிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு, டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஒரு கட்சியின் தலைவராக உள்ள பழனிசாமி, இன்னொரு கட்சித் தலைவரை அநாகரீகமாக விமர்சிப்பது அவரின் தரத்தையே காட்டுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் என்னை சந்திக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.
பழகுவதற்கு, நட்புக்கு சிறந்த நண்பர் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தலின் போது, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அவரின் செயல்பாடுகளும், தன்மையும் தான் காரணம்..வேண்டுமென்றே சிலர், எங்களை அவர் தூண்டிவிடுகிறார் என்ற தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். இன்னொருவர் தூண்டிவிடவேண்டிய அவசியமோ, இன்னொருவர் தூண்டிவிட்டு, நாங்கள் செயல்படுகிற நிலையோ எங்களுக்கு கிடையாது.
பழனிசாமி மாதிரியான பெரிய பெரிய தலைவர்கள் இப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். நாங்கள் ஜனவரிக்கு பிறகுதான் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அமமுக தலைமையில் கூட்டணி அமைக்கிற எண்ணமில்லை.
ஆனால், அமமுக இடம்பெற கூடிய கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக அமையும். தவெக நிர்வாகிகளுடன் அமமுக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என, சில ஊடகங்களில் செய்தி பார்த்தேன். அதெல்லாம் உண்மையில்லை. நாங்கள் எங்கள் கூட்டணி பற்றி டிசம்பர் மாதத்தில் தெளிவாக அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.