சென்னை: ‘பயன்பாட்டுத் துறையின் தேவையின் அடிப்படையில் கட்டிடங்களுக்கான மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்’ என்று பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித் துறை பயிலரங்கில், டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இப்பயி்ற்சியை பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அனைத்து உதவிப் பொறியாளர்களும், பயிற்சியின் அடிப்படையில் திறமையாகப் பணிபுரிய வேண்டும். பொறியாளர்கள் மேன்மேலும் படித்து, அவர்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆய்வு செய்வதில் கவனம் தேவை: உதவிப் பொறியாளர்கள், முதற்கட்டப் பணிகளாக, மண், நீர் பரிசோதனை, அஸ்திவாரம் பணிகளின்போது பூச்சி தடுப்பு முறை, கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை, உப்பு நீரை தவிர்த்தல், சாம்பல் நிறத்தில் சிமென்ட் உள்ளதா என்பதை பரிசோதித்தல், மணல், தூசி, துரும்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் துரு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல், செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுதல், அனைத்து பணிகளும் வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரம் அடிப்படையில் பணி நடைபெறுவதை உறுதி செய்தல். பணிகளில் ஒப்பந்ததாரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், தொழிலாளர்களைக் கண்காணித்தல், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்தல், கட்டுமானத்தின்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க உறுதி செய்தல் போன்றவற்றை உதவிப் பொறியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் . இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.