போபால்: கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் தேவா பர்தி.
இவரையும், இவரது மாமா கங்காராம் என்பவரையும் திருட்டு வழக்கு ஒன்றில் மத்திய பிரதேச போலீஸார் கைது செய்து குணா பகுதியில் உள்ள மியானா காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் தேவா பர்தி இறந்தார். இவர் மாரடைப்பால் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், போலீஸார் அடித்து சித்ரவதை செய்து கொன்றதாக தேவா பர்த்தியின் தாய் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சில போலீஸார் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சித் சிங் மாவாய், எஸ்.ஐ. உதம் சிங் குஷ்வாகா ஆகியோர் தலைமறைவாகினர். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. தலைமறைவான போலீஸாரை ஒரு மாதத்துக்குள் கைது செய்ய சிபிஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தலைமறைவு போலீஸார் பற்றி துப்பு கிடைக்கவில்லை.
இதற்காக சிபிஐ.,க்கு உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க் கிழமை கண்டனம் தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தலைமறைவு போலீஸார் சஞ்சித் சிங் மாவாய், உதம் சிங் குஷ்வாகா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.