மும்பை: இந்திய மைதானங்களில் பார்வையாளர் மாடத்தில் இருந்து வரும் மக்களின் ஆரவாரம் சிறப்பானது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்த தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன.
முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜியோ ஸ்டார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தது. “17 வயதில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றேன். நான் என் அறையில் இருந்தபோது எனது பெயர் கொண்ட ஜெர்ஸி எனக்கு கிடைத்தது. அதை அணிந்து எடுத்துக் கொண்ட படத்தை என் பெற்றோர் மற்றும் சகோதரர் உடன் பகிர்ந்து மகிழ்ந்தேன். அது உணர்வு பூர்வமான தருணம்.
எல்லோருக்கும் வாழ்வில் சவால் இருக்கும். எங்கள் குடும்பம் சாங்கலியில் இருந்தபோது பெண் பிள்ளைகள் அதிகம் கிரிக்கெட் விளையாட மாட்டார்கள். நான் பயிற்சிக்காக புனே வந்து செல்ல வேண்டும். சில நேரங்களில் 4 முதல் 5 மாத காலம் வரை குடும்பத்தை பிரிந்திருக்க வேண்டும். 14 வயதில் அதை செய்தது எனக்கு சவாலாக இருந்தது.
காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விளையாடியது மறக்க முடியாத ஒன்று. முயற்சி என்பது இருந்தால் நிச்சயம் அதற்காக நாம் களத்தில் போராடுவோம். அது இப்போதுள்ள அணியில் அதிகம் காணப்படுகிறது. நாங்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பை தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளோம்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. இந்த முறை மைதானத்தில் மக்களின் ஆதரவை பார்க்க ஆவலுடன் உள்ளேன். மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மக்களின் ஆதரவை மைதானத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். அந்த வகையில் இந்திய மைதானங்களில் மக்களின் ஆரவாரம் சிறப்பானது” என்று தெரிவித்துள்ளார்.