திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆந்திர அரசு சார்பில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் தனது குடும்பத்தாருடன் பிரம்மோற்சவ விழாவின் தொடக்க நாளில் கலந்து கொண்டு, இரவு சுவாமியை தரிசித்தார்.
இதனை தொடர்ந்து, ஆதிசேஷனாக கருதப்படும் 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு உற்சவ மூர்த்திகளை கண்டு பக்தி பரவசத்துடன் கோவிந்தா…கோவிந்தா.. என கோஷமிட்டனர்.
வாகன சேவையில் பல மாநில கலைஞர்கள் கலந்து கொண்டு மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இது அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தின் மீது ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு அன்ன வாகன சேவை நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.