வேடசந்தூர்: திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பொதுமக்களிடையே நேற்று மாலை அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தோம். திமுக ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியையாவது கொண்டு வந்தார்களா? தமிழகத்தை திறமையற்ற முதல்வர் ஆள்வதால் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் கிடைக்கவில்லை.
சட்டம் – ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வழக்குகள் அதிகரித்துவிட்டன. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? திண்டுக்கல் துணை மேயர் மகனுக்கு போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு உள்ளதாக கர்நாடக போலீஸார் சம்மன் வழங்கி உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். திமுக ஆட்சியில் 992 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதில் 75 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும் முதல்வர் கூறுகிறார்.
இதன்படி பார்த்தால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். எனவே, முதல்வர் சொல்வது அத்தனையும் பொய். வேடசந்தூர் நூற்பாலைகள் நிறைந்த பகுதி மின் கட்டண உயர்வு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடும்நிலையில் உள்ளன. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தைக் கொண்டுவந்து, ஏரி, குளங்களைத் தூர்வாரினோம். இதுபோன்று திமுக ஏதாவது சாதனை நிகழ்த்தியிருக்கிறதா? 10 ரூபாய் என்றாலே செந்தில்பாலாஜி நினைவுதான் வரும். பாட்டிலுக்கு ரூ.10 வீதம் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.