சென்னை: துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி, ராஜகோபாலாச்சாரி வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேசியதாவது: “2000 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய மன்னன் ஒருவர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதில் கடைசி 4 வரிகள் மிக முக்கியமானவை. ‘வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே’ என்று அதில் கூறியிருக்கிறார். அதாவது கீழே இருப்பவர் கல்வி கற்றால், மேலே இருப்பவன் அவனோடு சமமாக சேர வேண்டிய கட்டாயத்தை அது ஏற்படுத்தும்.
கல்வியை கற்கக்கூடாது என்று பழங்காலத்தில் இருந்து இன்று வரை தடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். கல்வியை சார்ந்து இரண்டு விதமான கருத்தியல்கள் உள்ளன. ஒன்று திராவிட கருத்தியல். எல்லாரும் படிக்க வேண்டும். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது. ஆனால் ஆரிய கருத்தியல் என்ன கூறுகிறது என்றால், கற்க வேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு பையன், ஒரு ஆசிரியரிடம் சென்று கேட்டபோது, நீ எந்த ஆள் என்று கேட்டு அவனுக்கு சொல்லித் தர முடியாது என்று அவனை அனுப்பி விட்டார். அவனாகவே வில்வித்தை கற்றுக் கொண்டு அவரிடம் மீண்டும் சென்றபோது அவனுடைய கட்டைவிரலை வாங்கிக் கொண்டார்.
அவரிடம் கர்ணன் சென்று கேட்டபோதும் அவரிடமும் ‘நீ என்ன ஆள்?’ என்று கேட்டு அனுப்பிவிட்டார். கிருபாச்சாரியாரிடம் சென்று நான் மேட்டுக்குடி என்று பொய் சொல்லி தொழில் கற்றுக் கொண்டார் கர்ணன். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று தெரிந்தவுடன் நீ கற்றுக் கொண்டவை அனைத்தும் உன்னை விட்டு ஒருநாள் போய்விடும் என்று சாபம் விடுகிறார் கிருபாச்சாரியார்.
துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி, ராஜகோபாலாச்சாரி வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சமத்துவம் இருக்கக் கூடாது என்று சொல்லும் இடத்தில் சமத்துவமும் சமூக நீதியும் இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு கட்சி, ஒரு கொள்கை ஆட்சியில் இருக்கும்போது, அவர்கள் எல்லாரையும் படிக்க வைக்க எவ்வளவும் முடியுமோ அவ்வளவு திட்டம் போடுகின்றனர்.
இதை தடுப்பதற்கு அவர்கள் முன்பு கட்டைவிரலை கேட்டது போல, கர்ணனுக்கு அம்னீசியா கொடுத்தது போல இன்று புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து நீங்கள் படிப்பதை தடுக்க பார்க்கின்றனர். இதை ஏற்கமாட்டோம் என்று சொன்ன நமக்கு நியாயமாக வரவேண்டிய நிதியை தரமறுக்கின்றனர்.
நமக்கு உடன்பாடில்லாத, முரண்பாடு கொண்ட ஒரு கட்சி ஒன்றியத்தை ஆளும்போது, கை, கால்களை கட்டி தண்ணீரில் போட்டபிறகும் தான் மட்டுமின்றி தமிழக மக்களையும் கரை சேர்க்கக்கூடிய உழைப்பை செலுத்தி இருக்கும் தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தியாகராஜன் குமாரராஜா தெரிவித்தார்.