கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாக வேலைவாய்ப்பில் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், பாவினி எனக்கூறப்படும் 500 மெகாவாட் திறன்கொண்ட அதிவேக ஈனுலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, மேற்கண்ட அதிவேக ஈனுலை மையத்தில் பயன்படுத்தப்பட உள்ள தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்களுக்கு அணுசக்தி நிர்வாகத்தில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரியும், விழுப்புரம் தொகுதி எம்பி.துரை.ரவிக்குமார் தலைமையில் செய்யூர் எம்எல்ஏ.பாபு மற்றும் விசிகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பஜார் வீதியில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டபோது, அதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், ஒருங்கிணைப்பு குழுவினர் கிட்டு, தயாளன், சம்சுதீன், செங்கேணி, மணவாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், விழுப்புரம் எம்பி.துரை.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்பாக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி அதிவேக ஈனுலை மையத்தை தொடங்கிவைத்தார். இதில், ஆபத்தான திரவ சோடியம் குளிர்விப்பானாக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
மாற்று எரிசக்திகளாக சூரிய மின்சக்தி பயன்படு்த்தப்படும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதற்கான இலக்குகளையும் அறிவித்தார். ஆனால், அத்திட்டம் கிடப்பில் உள்ளது. மேலும், ஆபத்தில்லா எரிசக்தியாக காற்றாலை உள்ள நிலையில், இவற்றை தவிர்த்து ஆபத்தான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், கடந்த 2007ம் ஆண்டு அணு திருத்த சட்ட ஒப்பந்தத்துக்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், தற்போது அதேச்சட்டத்தை பாஜக திருத்தம் செய்து மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு நாங்கள் நடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மேலும், அணுகழிவு குப்பை மேடாக கல்பாக்கத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், இத்திட்டத்தை தமிழக முதல்வர் அனுமதிக்ககூடாது. மேலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம்.
கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் அணுமின் நிலையத்தால் புற்றுநோய், கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், சிறப்பு சுகாதார காப்பீடு திட்டம் செயல்படுத்தி அதற்கான நிதியை, அணுசக்தி துறையிடமிருந்து பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.