மும்பை: நாட்டில் நடந்து வரும் வாக்குத் திருட்டை நிறுத்துமாறு ஜென் ஸீ தலைமுறைக்கு ராகுல் காந்தி விடுத்த வேண்டுகோளை விமர்சித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘ராகுல் காந்தி வேண்டுமானால் நேபாளத்திலேயே தங்கிக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய மாநாட்டில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “நேபாளத்தை நேசிக்கும் எவரும் அங்கேயே தங்கிக் கொள்ளலாம். இந்திய இளைஞர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேரமில்லை, ஜென் ஸீ தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அரசாங்கத்தை வீழ்த்த ராகுல் காந்திக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறாது. ஜென் ஸீ-க்கு அவர் விடுத்த வேண்டுகோள் வேலை செய்யாது” என்று கூறினார்
ராகுல் காந்தி தனது இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டுக்கு துணை போவதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குத் திருட்டு செய்பவர்களைப் பாதுகாப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
செப்டம்பர் 18 அன்று தனது செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நாட்டின் இளைஞர்கள், நாட்டின் மாணவர்கள், நாட்டின் ஜென் ஸீ தலைமுறையினர் அரசியலமைப்பைக் காப்பாற்றுவார்கள், ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள், வாக்கு திருட்டை நிறுத்துவார்கள். நான் எப்போதும் அவர்களுடன் நிற்கிறேன். ஜெய் ஹிந்த்.” என்று தெரிவித்திருந்தார்.