புதுடெல்லி: “பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் ஏலம் நடை பெற்று வருகிறது. அதில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் நிதி, கங்கை நதி தூய்மைக்குப் பயன்படுத்தப்படும்’’ என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
அதன்பின், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் நினைவுப் பரிசுகள், வெளிநாட்டு பயணங்களின் போது அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை சேகரித்து வைத்து ஏலத்தில் விட்டு வருகிறார். அதில் கிடைக்கும் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்குப் பயன்படுத்தி வருகிறார்.
அது போல் முதல் முறையாக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட்டார். அப்போது முதல் இதுவரை 6 முறை பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் இதுவரை ரூ.50 கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் கங்கை நதி தூய்மை திட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டது. தற்போது 7-வது முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் கடந்த 17-ம் தேதி ஆன்லைனில் தொடங்கியது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை – தேசிய அருங்காட்சியகம் மற்றும் மார்டன் ஆர்ட் ஆகியவை இணைந்து இந்த ஏலத்தை ஆன்லைனில் நடத்தி வருகின்றன. முன்னதாக மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறும்போது, ‘‘கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாள் முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் 1,300 பரிசுப் பொருட்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் அழகிய ஓவியங்கள், கலைப் பொருட்கள், சிலைகள், கடவுள் சிலைகள், விளையாட்டு நினைவுச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இவை இந்திய கலாச்சாரம், வேற்றுமையில் ஒற்றுமை, படைப்பாற்றால் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த ஏலத்தில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘எனக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வாங்க கடந்த சில நாட்களாக ஆன்லைனில் பலர் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்த ஏலத்தில் உள்ள பொருட்கள் நமது இந்திய தேசத்தின் கலாச்சாரம், படைப்பாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. ஏலத்தில் கிடைக்கும் தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு செலவிடப்படும். எனவே, நாட்டு மக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர்களில் தங்களுக்கு கிடைக்கும் அனைத்து பரிசுப் பொருட்களையும் ஏலம் விட்டு அதை நலத்திட்டத்துக்கு பயன்படுத்தும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பரிசுப் பொருட்களை வாங்க யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் ஏலம் கேட்கலாம்.