புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும். அதில் 3 குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகியை 9 நாட்களும் வழிபடுகிறோம். முதல் மூன்று நாட்கள் துர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வணங்குகிறோம்.
சர்வலோக நாயகியால் நமக்கு கல்வி, இசை, புகழ், செல்வம், தானியம், வெற்றி என அனைத்தும் கிடைக்கின்றன. ஆதிபராசக்தியை துர்கையாக வழிபட்டால் பயம் நீங்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வமும், சரஸ்வதியாக வழிபட்டால் கல்வியும், பார்வதியாக வழிபட்டால் ஞானமும் பெருகும்.
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் பத்து வயதுக்கு உட்பட்ட கன்னியரை வழிபடுவது வழக்கம். இவர்களுக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா என்று பெயர் சூட்டி வழிபாடு நடைபெறுகிறது.
ஸ்ரீஸூக்தம், லலிதா சஹஸ்ரநாமம், மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் உள்ளிட்ட மந்திரங்களைக் கூறி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு கன்னி பூஜைக்கு ஏற்ப நமக்கு பலன்கள் கிடைப்பதாகவும், அவர்கள் நம் இல்லத்துக்கு அம்பாளாக எழுந்தருள்வர் எனவும் முன்னோர் கூறுவர்.
மகிஷாசுரனை அழித்த வாராகியை வணங்குவதால் தனம், தானியம் பெருகி, சிறப்பான வாழ்க்கை அமையும். சுக்கிர தோஷம் நிவர்த்தியாகும். குடும்ப குழப்பங்கள் தீர்த்து அமைதி உண்டாகும். 4 வயது சிறுமியை கல்யாணி வடிவத்தில் நவக்கிரக நாயகியாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
முன்னதாக மலர்களை வைத்து கோலம் போட வேண்டும். காம்போஜி, கல்யாணி ராகங்களில் பாடல்களைப் பாடி, செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பழம், கல்கண்டு, கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் ஆகியவற்றில் எவை முடியுமோ அவற்றை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.